(சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா மெட்டில் கணபதி பாடல்)
அன்பிற் கினியவரே கணேசய்யா
அழகில் சிறந்தவரே,
என்னைக் கிறங்க வைத்தே, உலகில்
எழுதிச் சிறக்க வைத்தாய்.
பிள்ளைக் குரியவரே , பேசும் மொழியழகே,
கொள்ளை கொள்ளும் அழகே, என்னை
ஆட்டி வைப்பவரே.
உச்சி முகர்ந்திடவே என்னுள்ளம், உவகை கொள்ளுதையா
பச்சிளம் பாலகனாய் உந்தன், மடிதனில் படுத்திடுவேன்.
உமையிடம் பிறந்தவரே கணேசய்யா
செவ்விதழ் மெல்லியரே,
அன்னையாய் அணைப்பவரே, எந்தன்
ஆருயிர் நீயலவோ.
பின்னை ஓர் பிறப்பிருந்தால் கணேசய்யா
பற்றிடு என் கரத்தை,
என்னிடம் நீ இருந்தால் எனக்கொரு கவலையில்லை.
பண்புடன் பரிசளிப்பாய் கணேசய்யா,
பேதத்தைக் கெடுப்பவரே,
உந்தன் நகையினிலே உலகை
உள்ளத்தில் மறந்திடுவேன்.
காவியம் எழுதிடவே கணேசய்யா
நாவில் உன் நாமமிருக்கு,
அந்நிய தெய்வங்களெல்லாம் உந்தன்
பின்னேயென நினைப்பேன்.
அருகிலே நீ இருந்தால் கணேசய்யா,
அகிலம் மறக்குதையா,
பருப்பிலே பாயசம் போல் உந்தன்
பழகு தமிழ் மொழியாம்.
எரும்பிற்கும் துயர் நினையா துந்தன்
அருளுக்கு நானடிமை,
கரும்பு போல் இனிக்குதையா உந்தன்
கழுத்தினை தழுவிடவே.
நானென்னும் அகந்தையெலாம், உன்னுடல்
அணைக்க அகன்றிடுமே,
வானமும் வசப்படுமே உன்னை
உறவாகக் கொள்கையிலே.
