தோண்ட தோண்ட வற்றாத சுரங்கம் ஒண்ணு இருக்குது
வேண்ட மட்டும் அள்ளிக் கொள்ளு வித விதமாய் இருக்குது
வேதம் நாலு அங்கம் ஆறு சாத்திரங்கள் இருக்குது
நாதத்தாலே அறிந்து கொள்ள நல்ல ராகம் இருக்குது
பத்மநாப சுவாமி அதன் மேலே படுத்து கொண்டு உறங்குறார்
உத்து உள்ளே பார்த்து நின்றால் உண்மையதை விளக்குறார்
வெளிச் செல்லும் ஐம்புலனை உள்ளே கொஞ்சம் திருப்பிடு
பளிச்சென்று பிரகாசிக்கும் பொன்னு
ஜொலி ஜொலிக்குது
நான் என்ப தாரென்று ரமண ரிஷி சொன்னது
நான் நான் என்று உள்ளே நமனமத்து நிற்குது
காதிலும் கழுத்திலும் அணிந்து கொண்டு மகிழலாம்
மேதினியில் எல்லாரும் நம்மை பார்த்து ரசிக்கலாம்
ஆன்மஞானம் என்ற வைரம் இதயக் குகையில் இருக்குது
உற்றுப் பார்த்தால் பட்டை தீட்டி ஒளிவிட்டு படருது
ஐம்புலக் கள்வர் அதன் அருகில் நெருங்க பார்க்குது
வம்பு செய்யும் சம்சாரம் பித்து பிடிக்க வைக்குது
காலமிலா காலமெல்லாம் வாலையாகி விளங்குது
தூலமாகி காட்சி தந்து துன்பம் தன்னை நீக்குது
நவத் துவாரம் வழியாக பளிச்சென்று மின்னுது
சிவமென்ற சித் பிம்பம் ஜீவனுக்குள் ஒளிருது
பரமானந்த சுரங்கமது பொக்கிஷமாய் இருக்குது
வேறெந்த நினைவுமற்று வெட்டி வெட்டி எடுத்திடு
