புதின வாழ்க்கை!
(பொன்னியின் செல்வன் கதா பாத்திரங்கள் உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்கள்)
நாளைக்கு காலையில
நாம எழுந்திருப்போமா தெரியாது
வாளை சுழற்றி
வந்தியத் தேவன் போல
வீண் சண்டை நமக்கெதற்கு?
வாயால் முணுமுணுப்பு
நாராயணா என்று
ஆழ்வார்க்கடியான் போல்
நோக்கம் வேறொன்று
நடிப்பெதற்கு?
கல்யாணம் செய்து கொண்டு
வாழ்ந்தாலும்
நாளும் உறவோடு வீண் சண்டை
நந்தினி போல்
நாவெதற்கு?
சகோதரன் என்னவானான்
தினம் கவலை, தின்னும்
உணவினிலே ருசியில்லை
குந்தவை போல்
கவலைக் குழி எதற்கு?
உடலை தினம் தின்னும் நோய்
இருந்தாலும் அரசாட்சி !
சுந்தர சோழன் போல்
சூழ்ந்த சூழ்ச்சியிலே
சுழலும் நாற்காலி ஏனோ?
கழுத்தில் ருத்ராக்ஷம்
நெற்றியினில் திருநீறு
பல்லக்கு பயணமுடன்
மதுராந்தகன் போல்
பதவியிலே ஏன் ஆசை?
சுற்றும் படை வீரர்
வாள் வேல் படை கூடம்
நெஞ்சகத்தில் நந்தினி
கரிகாலன் கதை போல்
இரட்டை வேடம் ஏன்?
நம்மை கரம் பிடிக்க
நாதன் வந்திடுவான்
வானதி போல்
தினம்தினம் எதிர் நோக்கும்
கனவுதான் இவ்வாழ்வு!
நதியில் விழுந்தாலும்
காப்பாற்றும் கரம் உண்டு
விதியின் பாதையினை
விரட்ட முடியாது!
அருள் மொழி வர்மன் போல்
அரசாட்சி நமக்கெதற்கு?
இரட்டை வேடம் போட்டு
அரசாட்சி செய்கின்ற
பழுவேட்டரையர் போல்
குழுவாக சேர்ந்து கொண்டு
குதிக்கும் வாழ்வெதற்கு?
அன்பே என்றும் வெல்லும்
அதை அறியாமல்
வம்புடன் வகை சேர்ந்து
பகைமை பாராட்டும்
ஆபத்துதவிகள் போல்
பதுங்கிப் புறம் பேசும்
பேச்செதெற்கு?
நாடே நமதுதான்
அதை அறியாமல்
பூவைக் கொய்து விற்கும்
பூவையர் போல் வாழும்
சேந்தன் அமுதன் போல்
வாழ்க்கை நமக்கு ஏனோ?
கடலில் விழுந்தாலும்
காப்பாற்ற நீந்தி வரும்
ஊமைப் பெண் உண்டு
மட மனதே மண்ணில்
ஆசையுடன் மாய்ந்து போகாதே
அர்த்தம் பல சொல்லும்
கல்கிக் கதை இதுதான் !
