மார்கழி என்றால் குளிர்கிறது, மனம்
மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது
நேர்வழி எங்கும் இசைக்கிறது, கண்
நேரம் தன்னில் விழிக்கிறது
கார்மேக வண்ணனை நினைக்கிறது,
உடல் சிலிர்ப்பினை எய்தி களிக்கிறது
பாரினில் பனியும் படர்கிறது, பாதம்
பண்டரி புரத்துக்கு நடக்கிறது
ஆயர் பாடியே நிறைகிறது அதில்
ஆண்டவன் கண்ணனை அணைக்கிறது
வாயினில் வெண்ணெயை வைக்கிறது
அவன் உண்பதை எண்ணி உவக்கிறது
மாயனின் வண்ணத்தில் உவக்கிறது
மனம் மேதினி தன்னை மறக்கிறது.
காயத்தில் இட்ட எண்ணெய் போல்
புண்பட்ட மனமது குளிர்கிறது
கோபியர் கொஞ்சும் கண்ணனையே
கண்கள் என்றும் ரசிக்கிறது
நாபியில் வசிக்கும் நாரணனே
நந்தனின் இல்லத்தில் வசிக்கிறது
பாபியும் பரகதி பெற்றிடுவான்
பரவசம் எய்தி பகன்று விட்டால்
தூபியில் சீயனாய் வந்த பிரான்
தூங்கிடும் அழகில் மயங்கிடுவேன்
சூடிக் குடுத்த சுடர்க்கொடி போல்
சூக்குமம் மனதை சூழ்கிறது
வாடிப் போகும் வண்ண மலர்களையே
விரலால் கோத்திட விழைகிறது
பாடிப் பரந்திடும் கோதையைப் போல்
பாக்கள் உள்ளத்தில் பிறக்கிறது
நாடியே நாட்கள் நகர்கிறது என்
நாட்டம் அவன் மேல் நிற்கிறது
கண்ணா என் முன் வந்திடுவாய்
கருமை நிறம் என்னை மயக்கிறது
விண்ணில் இருந்து விழும் துளி போல
வேதாந்தம் என்னில் விழுகிறது
கண்ணில் பட்ட இடத்தில் எல்லாம்
கருமுகில் வண்ணமே தெரிகிறது
எண்ணில் ஆயிரம் பெயர்களையே
எந்தன் வாயும் உரைக்கிறது
