போர் பந்தரில் பிறந்தாய் நீ
ஆனால் ஏனோ
உனக்கு போர் பிடிக்கவில்லை!
உண்ணாவிரதம் இருந்தால்
உடல் நடுங்கும்
ஆனால்
நீ உண்ணாவிரதம் இருந்தால்
பரங்கியரின் படையல்லவா
நடுங்கியது!
அஹிம்சையை அறிவுறுத்தினாய்
ஆனால்
அந்த அஹிம்சை வாள்
அரசையே குத்தியது அல்லவா!
இரயிலில்
இரண்டாம் வகுப்பிலிருந்து
இறக்கி விடப்பட்டாய்
ஆனால்
இன்னும் நாங்கள்
இறங்கவில்லை!
கஸ்தூரி பாயிக்கு
புன்னைகையே நகை என்று
புரியவைத்தாய்
ஆனால்
இன்றும் புன்னகையையே
நகையாக அணிந்திருக்கிறார்கள்
இங்கே பல கஸ்தூரி பாயிக்கள்!
சத்திய சோதனையில் உன் வாழ்க்கை
சரித்திரம் எழுதினாய்
ஆனால்
இன்று ஏழைகளின்
நித்திய வாழ்க்கையே
சோதனையாகிவிட்டதை
அறிவாயா?
தீயதை போக்க
மூன்று குரங்கு மூலம்
போதனை செய்தாய்!
ஆனால்
எங்கள்
மனக்குரங்குக்குதான்
அது புரியவில்லை!
அன்று உன் வாழ்க்கை வரலாறு
சத்திய சோதனை ஆனது
இன்று அதனைப் படிக்காதோர்
வாழ்க்கை வேதனை ஆனது
வக்கீலாய் நீ வாதம் புரிந்தாய்
நாட்டிற்கே
விடுதலை கிடைத்தது
இன்றும் வாதாடுகிறார் ஆனால்
கிடைக்கவில்லை விடுதலை.
வாய்தா மட்டும் விடாமல்
கிடைக்கிறது
நீ உண்ணாமல் இருந்ததால்
நாட்டிற்கு விடுதலை கிடைத்தது
விடுதலை ஆனபின்பும்
நாட்டில் (ஏழைகள்) பலர் உண்ணுவதில்லை
உன்னை பின்பற்றுகிறார்களோ?
போர் மேகங்கள் சூழ்கிறது
உனது அஹிம்சை காற்றை
அனுப்பி வை
அதில் கோட்டுப்
பிரச்சினை கலையட்டும்
*காந்திஜி ! நீங்கள் மீண்டும் பிறந்து விடுங்கள்!*
மின்னியலின்
அடிமையிலிருந்து மீள
மீண்டும்
விடுதலை தேவைப்படுகிறது
(கவியோகி நாகசுந்தரம்)
