வாழ்வெனும் பெருங்கதைக்கோர் ஒரு முடிவில்லை இல்லை
ஊழிற்பெருவலியாம் திருக்குறள் என்றும் உண்மை உண்மை
கண்ணெதிரே காண்பதெல்லாம் வெறும் தோற்றம் தோற்றம்
மண்ணிதிலே மறைந்துவிடும் இது கூற்றின் சீற்றம் சீற்றம் – 1
அன்னை வயிற்றினுள் பத்து மாதம் மாதம்
இன்று வரை சுமைதானே இல்லை இன்பம் இன்பம்
கன்றீனும் பசுவோடு இல்லம் வீழும் வீழும்
என்ற மொழி பொய்யில்லை என்றும் துன்பம் துன்பம் – 2
உண்பதற்கும் உறங்குதற்கும் மறதி இல்லை இல்லை
விண்ணுறையும் தெய்வம் தொழ நேரம் கொஞ்சம் கொஞ்சம்
மண்ணிதிலே பூஜை செய்வார் எனக்கீடில்லை இல்லை என்று
கண்ணெதிரே கூறிடுவார் வெறும் வேஷம் வேஷம் – 3
பூஜை என்றால் பூக்களை விட்டெரிவதில்லை இல்லை
அவள் என்னதிரே இருக்கின்றாள் இங்கே இங்கே என
உவப்புடனே உன்னுள்ளே செய்யும் யாகம் யாகம்
யுவதியோடு இருந்தாலும் உள்ளுக்குள் தோன்றும் தெய்வம் தெய்வம் – 4
வேதம் புகழ் திருவடியே நமக்கு தஞ்சம் தஞ்சம்
பாதத்தைப் பற்றி விட்டால் விம்மும் நெஞ்சம் நெஞ்சம்
மேதாவித் தனமெல்லாம் மிகக் கொஞ்சம் கொஞ்சம்
ஆதாரம் எனப் பற்றி விட்டால் கூற்றும் அஞ்சும் அஞ்சும் – 5
பஞ்சமா பூதமெல்லாம் பரத்தின் சொந்தம் சொந்தம்
எஞ்சிய மீதியெல்லாம் இறையின் பந்தம் பந்தம்
அஞ்சாமல் உன்னுள்ளே திரும்பு கொஞ்சம் கொஞ்சம்
விஞ்சி நிற்கும் வேதமதின் பொருள் விளங்கும் விளங்கும் – 6
விளங்கி விட்டால் போதும் எங்கும் வெளிச்சம் வெளிச்சம்
கலங்கி நிற்கும் போதெல்லாம் குருவும் அருளும் அருளும்
தலைகனத்தை தொலைத்து விட்டால் தெரியும் தெரியும்
மலையான துன்பங்கள் விட்டுத் தொலையும் தொலையும் – 7
யார் எதிரே வந்தாலும் அவர் கடவுளின் உருவம் உருவம்
பார் முழுதும் தோன்றிவிடும் பராசக்தி வடிவம் வடிவம்
அறிவென்னும் கூர் வாள்தான் அசுரரை மாய்க்கும் மாய்க்கும்
கண்ணில் தெரிகின்ற பொருளெல்லாம்
பரத்தின் பிம்பம் பிம்பம் – 8
(கவியோகி)
