கொன்றை வேந்தன் பாடல்கள்

 

(பாடல் ஆக்கம் : கவியோகி நாகசுந்தரம், இசையுடன் பாடியவர் : இசைவேணி மும்பை அபர்ணா)

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

ராகம் : யதுகுல காம்போதி

தமிழ்ப் பண் : செவ்வழி

 

பல்லவி

 

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

அவ்வை சொன்னது அனைத்தும் சத்யம் (அ)

 

அனுபல்லவி

 

பெற்றவர் அன்னை வளர்த்தவர் தந்தை

குற்றமில்லாமல் அவரை வணங்குதல் தன்மை (அ)

 

சரணம்

 

தெய்வம் என்பது என்றும் நம்மை காப்பது

பொய்மை இல்லாமல் வாழ்வோடு இணைவது

ஐம்புலன் தன்னை அடக்குதல் வழிபாடு

என்பு தோலோடு உயிரை தந்தவர் நாடு (அ)

 

பெற்றோர் இருக்குமிடம் பெரிதான ஆலயம்

சற்றும் கோணாது சந்ததம் பேணவும்

பற்றும் கருணையால் சேய்தனை காக்கும்

அன்றும் இன்றும் என்றும் அவரே தெய்வம் (அ)

 

 

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று

 

ராகம் : கேதாரகவுளை

 

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

அவ்வை சொன்னது சாத்திரம் நம்பு

 

இறைவன் விளங்கும் இதயமே கோயில்

அறைகூவல் விடுக்கும் வேதமே வாயில்

 

மாலயன் ஈசன் மங்கள அம்பிகை

கோலமிகுந்த குமரன் கொற்றவை

நால்வர் இணைந்த அறுபத்து மூவர்

தினம் தினம் சென்று திருவருள் பெறவே

 

3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று

பழந்தக்க ராகம்

இல்லறம் அல்லது நல்லறம் அன்று
இதுவே அவ்வை சொன்னது நன்று

துறவறம் என்பது என்றும் பெரிது
காவியை தரிப்பது கலியில் அரிது

விருந்தினர் தனக்கு உணவிட வேண்டும்
கருமையாம் காக்கைக்கு வைத்திட வேண்டும்
பெருமையாய் வாழ்வில் இருந்திட வேண்டும்
அருமையாம் இல்லறம் அவ்வையின் விருப்பம்

 

4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

பண் : பஞ்சமம்
ராகம் : ஆஹிரி

இன்றே கொடுத்து விடு எல்லார்க்கும் தானம்
இன்றேல் தீயார் கொள்வர் உந்தன் தனம்

சேர்த்து வைப்பதெல்லாம் உனதல்ல
பார்த்து பெட்டியிலே பதுக்குதல் அழகல்ல

வந்து வாயிலில் நிற்பவன் இறைவன்
சொந்தமென்று கொடுத்தால் மகிழ்வன்
விந்தையானது உலகம் வேண்டாம் சொத்து
பிந்தைப் பிறவிக்கும் தொடரும் நல் வித்து

ஆறடி நிலமே அந்த தினத்தில் மிஞ்சும்
போராடி பெற்ற செல்வமோ கொஞ்சம்
நீராடி இறைவனை நினைத்து செய் தானம்
பாரினில் இல்லார்க்கு ஈவதே நல் ஞானம்

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு

ராகம் : நாதனாமகிரியா

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
அதுவே அவ்வையின் அருள் வாக்கு

பிறருக்கு அளிப்பதே பெண்மையின் சிறப்பு
உறவுக்கு கொடுப்பதே உயர் விருந்து

வகை வகையான பலகாரம்
விருந்துக்கு அளிப்பதே பெரும் வியப்பு
தன்னுடை உண்டியை தான் சுருக்கி
மண்ணுக்கு அளிப்பதே மகளிருக்கு உவப்பு

சக்கரை நோய்கள் தீண்டாது
பக்க வாதங்கள் ஏதும் வாராது
துக்க சமுத்திரம் இவ்வாழ்வு
அக்கறையான அவ்வையின் வாக்கு

 

6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

ஊரை பகைத்துக் கொள்ளாதே மனிதா
ஊருடன் ஒத்து வாழ்வாய் மனிதா

காரும் பங்களாவும் சமயத்தில் காலை வாறும்
ஊரில் உள்ளோரே உதவிக்கரம் அளிப்பார்

வம்சங்கள் தழைத்திட வேண்டும் உறவுகள்
நம்மூர் ஜனத்தோடு ஒத்துமையாய் வாழுங்கள்
வம்புகள் வேண்டாம் வாய்க்கால் தகராறு வேண்டாம்
கொம்பு கழி எடுத்து கொல்லவும் வேண்டாம்

ஒற்றுமையே செல்வம் வேற்றுமையே கெடுக்கும்
ஆற்றில் தனித்துறை அறியாமையே கொடுக்கும்
தூற்றுதல் வேண்டாம் துதிப்பதே சிறப்பு
மாற்று கருத்து இருந்தாலும் மதிப்பதே உவப்பு