அத்தியாயம் இரண்டு

புதுமைப் பெண்

 

வினை வலிது என்பார்கள். சீனு மாப்பிளை இறந்தவுடன் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்து விட்டது.

ஆவுடை அகத்திலும் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆவுடை தன் அன்னையை ஒருவாறு தேற்றினாள்.

பத்தாம் நாள் சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தன.

ஒரு பெரியவர் சொன்னார் :

 

“ஆவுடை இன்னும் பெரியவள் ஆகல, ஆனப்புறம் அதெல்லாம் செஞ்சிக்கலாம்.”

அவர் “அதெல்லாம்” என்று சொன்னதை நீங்களே யூகித்து கொள்ளலாம்,

 

இப்படியே நாள்கள் ஓடின. வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை.

“அம்மா நான் படிக்கணும்மா” என்று ஆவுடை கெஞ்சினாள்.  ஊரார் ஒத்துக்கொள்ளவில்லை.

 

“……. (கணவனை இழந்தவளுக்கு) பள்ளிக்கூடம் எதற்கு? ஆத்துக்குள்ளேயே அடங்கி அடக்க ஒடக்கமாக இருக்கணும்”

 

ஆவுடை மிகவும் வேதனைப்பட்டாள்.

அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி தமிழ்ப் புத்தகங்களை வாங்கினாள். அம்மா ஏற்பாடு செய்த ஒரு ஆசிரியர் உதவியோடு நன்றாக எழுதப் படிக்க கற்றுக்கொண்டாள். படிப்பில் கவனம் செலுத்த செலுத்த துயரங்கள் சற்று மறைந்தன.

 

இவள் படிப்பது சிலருக்கு தெரிந்து விட்டது.

 

“பொம்மனாட்டி அதுவும் ….. (கணவனை இழந்தவ,) இவளுக்கு என்னத்துக்கு படிப்பும் கிடிப்பும்?”

“ஆத்துல அடக்க ஒடுக்கமா இருக்க வேண்டாமோ, படிச்சு பெரிய மனுஷியா ஆகணுமோ?”

 

இப்படியெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் ஆவுடையும் சரி அவள் அம்மாவும் சரி எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து அவள் படிப்பில் கவனம் செலுத்தினார்கள். இவர்கள் அகத்துக்கு யாரும் அதிகம் வராததும் இவர்களுக்கு வசதியாக இருந்தது. ஆவுடை தமிழ்ப் புத்தகங்கள் படித்து தன் அறிவை வளர்த்துக் கொண்டாள்.

 

ஆனால் அடுத்த இடி வந்து இறங்கியது.

 

ஆவுடை பருவம் அடைந்தாள்.

 

“ஆவுடை பெரியவள் ஆயிட்டா! சாஸ்திர சம்ரதாயப்படி செய்ய வேண்டியது இருக்கே? வைத்திய லிங்கத்தை வரச் சொல்லி எல்லாம் செஞ்சிடுங்கோ”

அந்தக் கொடுமையை கண்ணால் பார்க்க வேண்டுமே என்று நினைத்த போது அம்மாவிற்கு கதி கலங்கியது.

வாழாத கணவனுக்காக வாழ வேண்டியவள் வயோதிக தோற்றத்தை அடைந்தாள். பெண்ணுக்கே உரிய அழகான தன் தலைமுடியை அல்ப வயதில் இறந்த அந்த சிறுவனுக்காக தானம் தந்தாள். வெள்ளை மனம் கொண்ட அந்த சின்ன யுவதி வெள்ளை ஆடை புனைந்தாள்.

 

“எல்லாருக்கும் எழுத்தாப்பல வரப்படாது,”

“நதி கொலங்கள்ள நாலு பேர் முன்னாடி ஸ்நானம் பண்ணப்படாது”

“கல்யாணம் கார்த்தின்னா வந்து கலக்கப் படாது”

“மடியா ஆசாரமா ஆத்துக்குள்ளையே இருக்கணும்”

“இதெல்லாம் சொல்லி வைங்கோ அவகிட்ட.”

 

அக்ரஹாரத்தில் அதிகாரங்கள் தூள் பறந்தன.

 

புழுவாய்த் துடித்தாள் ஆவுடை.

இதில் என் குறை என்ன? பருவம் அடையும் முன்னர் பால்ய விவாகம் பண்ணிண்டு கணவங்கற பேர்ல ஒரு பையன் இறந்துட்டா எனக்கு ஏன் இந்தக் கோலம்? திருமாங்கல்யம்னா என்னன்னே தெரியாத ஒரு சிறுவன் கட்டின ஒரு கயறு கழுத்தில் இல்லன்னா நா எதிர்ல வரக்கூடாதா? அப்படி வந்தா அவாளுக்கு என்ன கெடுதல் நடந்துடும்? நதில குளத்துல ஆடு மாடுகள் கூட ஒண்ணா குளிக்கரது, குடிக்கரது, மனுஷா மட்டும் தீட்டா? நாலு பேர் என் அழக பார்க்கக் கூடாதுன்னு எனக்கு மொட்டை அடிக்கிரா, வெள்ளை புடவை கொடுக்கரா, பார்க்கரவா பார்வ அப்படி, அவா கண்ணன்னா அவிக்கணும்?

 

இப்படியெல்லாம் சிந்தித்தாள் அந்த புதுமைப் பெண் ஆவுடை.

 

***

இப்போது போல் கடிகார அலாரமோ அலைபேசி அலாரமோ இல்லாத விடிகாலைப் பொழுது. இருள் கவிந்த காலையில் இதமான காற்று குளிரை மெல்ல வரவழைத்தது.

 

அந்த அழகான கிராமத்து அக்ரஹாரத்தில் அனைத்து வீடுகளிலும் எல்லாரும் உறங்கிக் கொண்டிருந்த அந்த வேளையில் ஒரு ஜீவன் மட்டும் உறங்காமல் விழித்துக் கொண்டிருந்தது.

 

வெளிச்சம் வருவதற்குள் நீராடி திரும்ப வேண்டும். இது ஊரிட்ட கட்டளை. குழந்தைத் திருமணம் செய்து அந்த சிறு வயதில் கணவன் என்று ஒரு சிறுவனை இழந்த பிறகு அந்த சிறுமிகள் அனுபவிக்கும் கொடுமைகள் மிகவும் அதிகம்.  அத்தகைய ஒரு சிறுமியாக இருந்த ஆவுடைக்கு தற்போது இளம் வயது.

 

இருள் விலகாத அந்த காலைப் பொழுதில் அவள் மனதில் ஓடிய எண்ண ஓட்டங்களுக்கு ஈடு கொடுத்து ஆற்றை நோக்கி விறுவிறுவென நடந்தாள் ஆவுடை..

 

தனிமை அவளை வைராக்கிய சீலையாக மாற்றியிருந்தது.

 

அன்னையின் அரவணைப்பும் தமிழ் அன்னையின் மடியும் மட்டுமே இப்போது அவளுக்கு இருந்த ஒரு ஆறுதல். தனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வகை செய்தது தனது அறிவைப் பெருக்கிக் கொள்ள வகை செய்ததும் அவளது அன்னைதான்.

 

அந்தக் குளிரில் சிலீரென்றது ஆற்று நீர். நீராடி முடித்து அங்கிருந்த ஆலமரத்தடி விநாயகரை வணங்கி திரும்பி வீட்டிற்கு வரும்போதுதான் கவனித்தாள்.

 

ஊர் முழுவதும் தோரணங்கள் கட்டப்பட்டு கோலாகலமாக விழாக்கோலம் பூண்டிருந்தது.

 

“இன்று எந்த பண்டிகையும் இல்லையே? என்னவாக இருக்கும்? யாரிடம் கேட்பது?”

குழம்பிய மனத்துடன் வீடு திரும்பினாள் ஆவுடை.

அம்மா முழித்துக் கொண்டு பல் துலக்கிக் கொண்டிருந்தாள்.

 

“அம்மா இன்று ஊரில் என்ன விசேஷம். விழாக் கோலம் பூண்டிருக்கிறதே? இன்று எந்த பண்டிகையும் இல்லையே?”

 

முகம் அலம்பிக்கொண்டு வந்த அம்மா

“ஆமாம் அம்மா! யாரோ ஒரு மஹான் வருகிறாராம்! பெயர் கூட ஏதோ,

ஆம்! ஶ்ரீதர அய்யாவாளாம்! அவர் வருகிறார். மிகவும் பெரிய மஹானாம்.”

 

இதைக் கேட்டவுடன் அந்தப் பெண்ணின் முகம் மலர்ந்தது.  மஹான்களையும், மகத்துக்களையும் தரிசனம் செய்ய வேண்டும் என்று அவளுக்கு நெடுநாட்களாக ஆவல். ஆனால் என்ன செய்வது? எதிரே செல்லக்கூடாது என்று சக மனிதர்களின் ஆணை.

 

இன்று எப்படியாவது அவரை தரிசனம் செய்ய வேண்டும் என்று அவளுக்குள் ஒரு தீர்மானம்.

 

புதுமைப் பெண்ணாக வாழ்ந்த அவளுக்கு நமது வேதாந்த தமிழ் நூல்களில் இருந்த பிடிப்பினால் அத்தகைய நூல்களில் கூறப் பட்டிருந்தபடி மகான்களை காண்பதே நமது ஆன்ம முன்னேற்றத்திற்கான வழி என்பது தெரிந்திருந்தது.

 

அதனால் இன்று எப்படியேனும் அந்த மகானை தரிசனம் செய்து விட வேணும் நினைத்தாள்.

நல்ல எண்ணங்கள் என்றும் பொய்த்ததில்லை. அதேபோல் அவளது எண்ணமும் பொய்க்க வில்லை.

வாசலில் கால் சலங்கையின் ஒலிகள் கேட்டன. கூடவே

“கங்காதர கங்காதர சிவ சிவ கங்காதரகங்காதரா”

அமுதம் போன்ற குரலில் நாமாவளிகள் தேனென ஒலித்தது.

“அம்மா! இங்கே வாருங்கள்” என்று அழைத்தாள் ஆவுடை .

 

பயணம் தொடரும்….

 

error: தயவு செய்து வேண்டாமே!!