அத்தியாயம் ஒன்பது

ஆற்று வெள்ளம் பிரிந்தது ! ஆத்ம ஞான வெள்ளம் பிறந்தது !

ஆற்று வெள்ளத்தைக் கண்டு அனைவரும் ஓடவும், ஆவுடை அக்காள் மாத்திரம் சிவ தியானத்தில் ஆழ்ந்திருந்தாள். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

பெரும் வெள்ளமாய் வந்த ஆற்று நீர் ஆவுடை அக்காள் இருந்த இடத்தை மட்டும் விட்டு அப்படியே இரண்டாகப் பிரிந்து சென்று வடிந்து விட்டது.

இதைக் கண்ட அனைவரும் பெரும் ஆச்சர்யமும் ஆவுடை அக்காள் மேல் பக்தியும் கொண்டு மலைத்து நின்று விட்டனர். இதை எதையும் அறியாத ஆவுடை அக்காள் பூஜை முடிந்து எழுந்து வந்தார்கள்.

“என்ன ஆயிற்று ! எல்லோரும் ஆச்சர்யத்தோடு நிற்கிறீர்களே” என்று கேட்கவும்,

“தாங்கள் பூஜையில் இருத்த பொது ஆற்றில் வெள்ளம் வந்து விட்டது. நாங்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடி வந்து விட்டோம். தாங்கள் மாத்திரம் தியானத்தில் ஆழ்ந்திருந்தீர்கள். ஆற்று வெள்ளம் இரண்டாகப் பிரிந்து பின் வடிந்து விட்டது. ஆச்சர்யம் ! ஆச்சர்யம் !”

என்று கூறினார்கள்.

அதைக் கேட்ட ஆவுடை அக்காள் அப்போது கூறினாள் :

“ஆத்ம ஞானவலைக்குள்ளே நான் அகப்பட்டு கொண்டு விட்டேன். அதனால் தான் இங்கு நடந்தது எதுவும் என் காட்சியில் தென்படவில்லை.”

என்று கூறி அவள் அடைந்த ஆத்மானுபூதியை ஒரு பாடலாக பாடவும் அங்கிருந்தவர்கள் மேலும் ஆச்சர்யம் அடைந்து மகிழ்ந்தனர்.

அந்த பாடல் இதோ :

(ராகம் தோடி)

பல்லவி
ஆத்ம ஞானவலைக்குள்ளே நான் அகப்பட்டு கொண்டேனே, விதியே!
அனுபல்லவி
பத்மலோசனர் முகத்தில் விழித்தபலனோ யிது நானறியேன் (ஆத்ம)
சரணம்
  1. ‘தத்வமஸி’ என்னும் மருந்தை கூட்டி, தாம்பூல சர்வணத்தால் ஊட்டியே, யுக்திஸாரம் மிஞ்சியே, ஸம்யோகத்தில் என்னுடன் கெஞ்சியே, நிந்தியானந்த நிலையை நிறுத்தியே, உருவேத்தியே, வைத்து கொடுத்தார், என்னமோ அதில் மயங்கினேன், அத்தை தயங்கினேன் சற்றே (ஆத்ம)
  2. அகத்திலென்றும் புறத்திலென்றும், அடுத்து கொண்டவர்க்கு ஆகியே, ஸுகத்தை உள்ளுக்குள்ளூட்டியே சொந்தமாய் என்னை பாராட்டியே, இகத்தாரென்னை ஏசவே இதத்திலே அவர் மதத்திலே, ஜகத்தில் ஒன்றுமில்லாமல் ஆக்கியே, செய்தவரிவர் செய்தவரிவரென்னும் (ஆத்ம)
  3. தத்பத சுருதி விளைவுதானோ? தலையிலே பிரம்மன் எழுத்துத்தானோ? இப்படி என்றும் நானறியேன், இந்த சித்பரமே அப்பிரமேய ‘தத்’பத சுருதி தெரியுமோ, தர்மிகளல்லோ நான் கர்மிகளல்லோ அப்ரமேய சிதாத்மரூப, அசலமாம் வெங்கடேசுவர மாமவ (ஆத்ம)

இந்தப் பாடலை அனைவரும் கேட்டு மகிழ்ந்தனர்.

இதன் பின் ஆவுடை அக்காள் தன் ஸ்ரீ குருநாதர் கூறியவாறு செங்கோட்டைக்கே திரும்பினாள்.

ஊர் எல்லையில் வந்து நின்றாள்.

அப்போதுதான் அனைவரும் பார்க்க மற்றுமொரு அதிசயம் நிகழ்ந்தது.

பயணம் தொடரும்….

error: தயவு செய்து வேண்டாமே!!