அறிமுகம்

நீடுபுகழ் உலகுதனில் மைந்தர் மாதர் நேயமொடு தாம் பயந்த புதல்வர் வாயில்,
கூடுமொழி மழலையொடு குழறி ஒன்றும் குறிப்பரிதா யிடினுமிகக் குலவிப் போற்றி,
மாடு நமக் கிதுவென்று கொண்டு வாழ்வர் அதுபோல மன்னு தமிழ்ப் புலமை யோரென்,
பாடுகவிக் குற்றங்கள் பாரார் இந்நூல் பாராட்டா நிற்பர் அருட் பரிசி னாலே.

(மிக்க புகழுடைய இந்த உலகில் உள்ள மனிதர்கள் தனது புதல்வர்களின் வாயிலிருந்து வெளிப்படும் மழலைச் சொற்களை அது அர்த்தம் இல்லாவிடினும் மிக்க நன்று  என்று அவர்களை பாராட்டுவது போல் எனது கவிதைகளை தமிழ்ப் புலமை கொண்டவர்கள் குற்றம் பாராட்டாது அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். )
வணக்கம்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

இது பொய்யாமொழி வள்ளுவரின் வாக்கு. மனக்கவலை மாற்றுவதில் இறைவனைப் போலவே கவிதைகளும் பெரும் பங்காற்றுகின்றன. எழுதுபவருக்கும் அதனை ரசித்து படிப்பவருக்கும் மனக்கவலையை அது மாற்றுகிறது.
அந்த வகையில் இதில் இடம்பெற்ற எனது கற்பனையில் உதித்த கவிதைகள் ரசித்தால் மகிழ்ச்சியே. எனது முதல் ரசிகை அன்புக்குரிய எனது அன்னையார் அவர்கள்தான். எந்த பாடல் எழுதினாலும் உடனே அதை மெட்டமைத்து பாடி என்னை மகிழ்விப்பதோடு, எனக்கு கவிதை எழுத நேரம் தந்தவள். எனது அன்னையாரின் மறைவுக்குப் பின்னர் எனது அடுத்த ரசிகர் மதிப்பிற்குரிய எனது தந்தையார் அவர்கள்தான். இது நன்றாக உள்ளது என்று ஊக்கப்படுத்துவதோடு கூட ஆனால் சிறிது மாற்றம் செய்யவேண்டும் என்று எனது அகங்காரத்தை முளையிலேயே கிள்ளி எறிவார். அதுதான் மேன்மேலும் படைப்புகள் நல்ல முறையில் உருவாகக் காரணம்.
அருள்தரும் ஆயிரம் தமிழிசைப் பாடல்களுக்காக வேதாந்தக் கவியோகி என்ற விருதளித்த ருதம்பரா ஞான ஸபா அங்கத்தினர்களுக்கும், தற்போது தொடர்பில் இருக்கும் முகநூல் வாட்சப் குழும உறுப்பினர்களுக்கும் அவர்களால் ஊக்குவிக்கப்பட்டதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் சில பல பாடல்களை அற்புதமாக இசையமைத்து பாடியுள்ளார்கள் பெங்களூர் ராஜராஜேஸ்ரி சகோதரிகள்.
இதில் இடம்பெற்ற சில பல கவிதைகளை இசையுடன் பாடலாகப் பாடியுள்ளார் எனது உற்ற நண்பர் புதுடில்லி திரு. ம. சுரேஷ் அவர்கள்.  எனது சகோதரிகள் ஸ்ரீமதி அபர்ணா கிருஷ்ணன் மும்பையிலிருந்தும் ஸ்ரீமதி ஸீதா வெங்கடேசன் சென்னையிலிருந்தும் சில பல கவிதைகளை பாடி அசத்தி உள்ளார்கள். கவிதைகளுடன் அவையும் இதில் இடம்பெற்றுள்ளன. மிக நன்றாக உள்ளது. கேட்டு ரசியுங்கள்.
வாழ்த்துரை அளித்த உயர்திரு திருப்புகழ் அய்யா அவர்களுக்கு மிகுந்த நன்றி. 
எப்போதும் எங்கேயும் படிக்க ரசிக்க வலை தளமாக இருந்தால் நல்லது என்பதால் இப்படி வடிவமைத்துள்ளேன். இந்தக் கவிதைகளில் சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப் பிழை, தட்டச்சுப் பிழை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்தி பதிவு செய்கிறேன்.
மேலும் எழுதும் கவிதைகள், படைப்புகள் இதில் அவ்வப்போது வலையேற்றப்படும்.
என்றும் நன்றியுடன்,

வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்.