==ஆசியுரை==
ஜயசக்தி!
படிகநிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரைபோற் கையும் – துடியிடையும்
அல்லும் பகலும் அநவரதமும் துதித்தாற்
கல்லுஞ் சொல்லாதோ கவி ……….. கம்பர்
அன்பாய் உடல்பொருள் ஆவியெலாம் ஏற்று
எனக்கின்பார் குருவாயினிதுவந்தே – துன்பமெலாம்
போக்கிச்சிதானந்ததேனமுதமீந்த செல்வன்
நோக்கு சிவஸ்வாமி நாதனே ….. அருட்சக்தி
ஆசியுமாயுளும் மிகப்பெற்று
காசினியில் புகழப்பெற்று
வாசிக்கும் நல்கவியியற்றி
தேசுபுகழ் சுந்தரா நீ வாழி! …… அருட்சக்தி
அன்பான தமிழ் ரஸிகப்பெருமக்களே !
ஆதிமொழி இரண்டு. ஸமஸ்கிருதமும் தமிழுமே! நாமறிவோம். ஸமஸ்க்ருதத்தின் கவிதைப்புலவர் காளிதாசன். தமிழில் பாமரனும் அகராதி இல்லாமல் புரிந்து சொல்லும் முறையில் கவிஞனாக இருந்தவன் நமது சுப்ரமணியபாரதி. கவிக்கு கம்பன் என்றது முன்பு. அவரது கவிதை சற்று கடினமே! பாரதிக்குபின்பே தமிழ்மொழியில் கவிதை பாடல்கள், வசனகவிதைகள் என அதிகம் பரவலாக காணுகிறோம். அந்த வகையில் இன்று அனேகர் அற்புத ஆற்றலோடு கவி புனைகிறார்கள். இத்தனை முன்னுரை எதற்கென்றால் விஷயத்துக்கு வருகிறேன்.
எனது குமாரர், உங்கள் “வேதாந்தகவியோகி நாகசுந்தரம்” இளமைதொட்டே கவி எழுதுவார். அதனை ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தியதில் எனக்கும் பெரும் பங்குண்டு. ஆசுகவி போன்று சில மணிதுளிகளிலேயே கொடுத்த தலைப்புக்கு ஏற்ற கவிபுனையும் திறமை உண்டு. கற்பனையில் திளைப்பதே கவிஞனின் இயல்பல்லவா! கவி இயற்றுவதில் பொதுஇயல்பு என்றும் சிறப்பு இயல்பு என்றும் சொல்வார்கள். இவரது கவிகள் பெரும்பாலும் இரண்டிலும் அமைந்து வரும். தனது வழிபடு தெய்வமான சக்தியின் பெருமைகளையும் தத்துவங்களையுமே அனைத்து கவிதைகளின் ஊடேயும் விரவி நிற்பதை காணலாம்.
கவிதைக்கு சிறு துரும்பு முதல் பெரிய சிகரம் வரை எந்த பொருளும் பாடுபொருளாகலாம். புதுக்கவிதையும் இவ்வாறு தான் அமைகிறது. ஹைகூ என்ற வகையும் இதில் சேரும். அன்பு, மரம், குருவி, மண், நீர், காற்று, நம்பிக்கை, பாசம், நட்பு, காதல், இயற்கை, வறுமை, விலைவாசி, பெண்மை, புயல், கடல், பக்தி, சக்தி, ஆன்மீகம், தத்துவம் என எந்த பொருளை பற்றியும் இந்த தொகுப்பில் படிக்கலாம். மரபுக்கவிதையும் உண்டு. இவ்வாறு பல காலமாக எழுதி வைத்திருந்தவைகளின் தொகுப்பே இந்நூல். சித்தர்களிடம் நான் கொண்ட தொடர்பே இதில் பல கவிதைகள் சித்தர்களின் சந்த பாடல்கள் போன்று அமைந்துள்ளன எனலாம்.
சென்ற 2008 இல் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்கள் 1000 க்கும் தனித்தனியே பொருளோடு கூடிய பாடல்களாக (ராகம் அமைத்து பாடும் முறையில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று) அமைந்தவைகளை தொகுத்து இரு நூலாக வெளியிட்டோம். எங்கள் ருதம்பரா ஞானஸபா வேதாந்தகவியோகி என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது. காமகோடி ஸ்ரீமஹாபெரியவர்கள், எனது ஸ்ரீகுருநாதரவர்கள் அருளாலும், வாக்வாதினியாம் ஸ்ரீதேவியின் கருணையாலும் தமிழ் மொழிப்புலமை இல்லாமலே திருவருளால் வெளிவந்த இந்த கவிதை தொகுப்பு இணைய தளத்தில் வெளிவருகின்றது.
தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்று, படித்து இன்புற வேணுமென வேண்டுகிறேன்.
உங்கள் அன்பன்,

அருட்சக்தி நாகராஜன்.
Founder/President,
RITAMBHARA JNANA SABHA
New Delhi
Recent Comments